Tuesday, August 4, 2009

பணம்

உனக்கு உயிரில்லை

ஆனால் மனித உயிர்கள்

உன் மீது உயிராய்.


பூமி கூட சூரியனைச்

சுற்றாமல் சுழலலாம்

மனித உயிர்கள் உன்னைச்

சுற்றாமல் வாழாது.


உயிரினங்கள்

தங்கள் இனத்தோடு சேர்வது போல்

நீயும்

உன் இனம் நாடியே சேர்கிறாய்


நீயும் அணு போல்தான்.

உன்னை எப்படியும் பயன்படுத்தலாம்

ஆயுதமாகவே உன்னை

அதிகம் பயன்படுத்துகிறோம்


“அவன்” இன்றி அணுவும் அசையாது

எங்கள் முன்னோர் வாக்கு

“அவன்” என்பது யாதென உணரவே

அவர்கள் ஆயுள் முழுதும் அலைந்து சென்றார்கள்


அவன் என்பவன் நீதான் என

நாங்கள் கண்டு கொண்டோம்

உன்னைச் சரணடைந்தோம்

உனக்கு அடிமையானோம்

அடிமையான பின்……..

சுற்றம் மறந்து

நல்ல சுகம் மறந்து

பெற்று வளர்த்த தாய் மறந்து

பெற்றெடுத்த சேய் மறந்து

வெட்கத்தை விட்டொழித்து

தன்மானத்தை தாரை வார்த்து

உன்னை அடையவே ஒயாமல் ஓடுகிறோம்.



புகழ்போதை, சுகவாழ்வு

உன் நிழலில் உள்ளதால்

மனித இனமே உன்முன்

மண்டியிட்டு கிடக்கிறது.


கீரைகட்டும் பாட்டிமுதல்

கப்பல் கட்டும் பொறியாளர் வரை

பலரும்

ஊழல் செய்து உயிர்வளர்க்கிறார்கள்


பெண்களின் கற்பு

ஆசைக்கு அடிமையாவது கொஞ்சம்

காசுக்கு அடிமையாவது கணக்கில் அடங்காது


ஜனநாயகத்தூண்கள் நான்கும்

உனக்கு தலைவணங்குவதால்

அதன் மணிமுடிகள் உன் காலடியில்

பஞ்சமா பதகங்கள் எல்லாம்

உன்னால் இன்று

நடைமுறை வழக்கமாகிவிட்டது.


கடவுள் விசயத்தில்

ஆத்திகமும், நாத்திகமும்

எப்போதும் எதிர்த்திசையில்

உன் விசயத்தில் எல்லோரும்

ஒரே திசையில்


இக்கலியுகத்தில் இன்னும் சில

இளிச்சவாயர்கள்

இருக்கவே செய்கிறார்கள்



உன் ஆளுமை உறங்கி

நேர்மை விழிக்குமென்று

நேர்மை உறங்கிவிட்டதா?

அல்லது உயிரை விட்டதா?

தெரியவில்லை


அந்த ஏமாந்தவர்களைப் பார்த்து

நீ சிரிப்பது புரிகிறது

இந்த மானிட உலகம் இருக்கும் வரை

நீ அதற்கு எஜமானன் என்று

அனால்……

உன்னை மட்டுமே

போற்றிப் பிழைக்கிறார்கள்

இந்த இழி பிழைப்பு

எதற்கு என்று தெரியவில்லை

ஒரு வேளை

எங்கள் முன்னோர்கள் தேடிய

‘அவனுக்கு’ இவை எல்லாமே

தெரியுமோ.. தெரியாதோ..

தெரியவில்லை

Monday, August 3, 2009

காமராசர்

மகாத்மா என்றாலே
நம் தேசத் தந்தை தானே.
தலைவர் என்றாலே
பெருந்தலைவர் நீ தானே.

தலைவர்கள் வாழ்வில்
அவ்வப்போது சில தியாகங்கள்
தியாகமே ஆனது
உன் வாழ்க்கை


இவர் தான் தலைவரெனும்
உடல் மொழி உனக்கு
கை மண் அளவே உன் படிப்பு
அறிவுப் பார்வையில் தொலைநோக்கு.

தூக்கத்தை துறந்து
ஏழைகள் ஏற்றம் பெறக்
கனவு கண்டாய்

சுதந்திரத்தை போராடிப் பெற்றோம்
வருமையை சுதந்திரமாய் பெற்றோம்

சில சோற்றுப் பருக்கையில்
குழந்தையின் பசியாற்றி
பசி மறந்த தாய் போல்
அவ்வப்போது சேர்ந்த நிதியிலும்
அருமையான திட்டங்கள்
பல வகுத்தாய்
நிறைவாய் அவற்றை நிறைவேற்றினாய்.

நிர்வாகத் திறத்தால் நம் மாநிலத்தை
முன்னிலையாக்கினாய். மற்ற
மாநிலங்களுக்கு வழிகாட்டினாய்.

இப்போதெல்லாம்
ஓட்டுப்பசியாற்ற வேண்டி
ஆயிரக்கணக்கில் கோடிகள்
கொட்டி உடனடி உணவைப்போல்
குறுந்திட்டங்களாகவே சமைக்கின்றனர்.

ஏழைகளின் வயிற்றையே நீ
எப்போதும் பார்த்ததால்
அவர்கள் கையிலிருந்த வாக்குகள்
உன் கண்களுக்கு தெரியவில்லை.

ஏழை பங்காளன் எனும் வார்த்தை
உன்னால் தான் உயிர் பெற்றது.

எத்தனை நேர்மை
எத்தனை உழைப்பு
எத்தனை திட்டங்கள்

உன்னால்
நித்தம் ஒருவேளை பசியாறினோம்
இலவசமாய் கற்றுத்தேறினோம்

பசியாற்றி வளர்த்த தாயை
சிலர் பட்டினி போட்டது போல்
சுக வாழ்வு கிடைக்குமென
நம்பிய எம் மக்கள்
ஜனநாயகத்திற்கும்
அதை காத்து உழைத்த உனக்கும்
ஒன்றாய் ஓய்வளித்து தோற்றார்கள்

பலனை எதிர்பாராத
கர்ம வீரன் நீ
உனக்குள் பாதகமில்லை
ஆனால்….

உண்மையறிந்து உறுத்துகிறதே
எங்கள் நெஞ்சம்

இதோ
உன்னால் பசியாறிய
எங்கள் கைகளில் ஓட்டு

ஆனால்

உன்போன்ற தலைவர்
ஒருவர் கூட இல்லையே இப்போது
நாங்கள் வேண்டிடும் அந்தத் தலைவர் வருவார?

நீ போற்றிக் காத்த ஜனநாயகம்
மீண்டும் துளிர்க்குமா?

அதைக் காண ஏங்குகிறோம்-உன்
ஆன்மா இப்போதும் படுத்திருக்கும்
என நம்புகிறோம்.

எங்கள் கண்ணீர் வாக்குகளால்
உன்னை எப்போதும் ஜெயிக்கவைப்போம்
நீ கூறியது போல்
எங்கள் எண்ணங்களில்
எப்போதும் படுத்துக் கொண்டே
ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்.

Sunday, August 2, 2009

தாயை இழந்த குழந்தை


உன்னைக் கண்ட பின்புதான்

நான் இழந்தது ஏதுமில்லை என

உணர்ந்து கொண்டேன்

எதை இழந்தாலும் வாழமுடியும் என

கற்றுக் கொண்டேன்.

இறைவா......

ஒருநாள் உயிரேனும்
மலர்ந்தே மலர்ந்து
மலர்ந்தே மடியும்
சிறு மலராய்
ஏன் என்னைப் படைக்க வில்லை