Monday, August 3, 2009

காமராசர்

மகாத்மா என்றாலே
நம் தேசத் தந்தை தானே.
தலைவர் என்றாலே
பெருந்தலைவர் நீ தானே.

தலைவர்கள் வாழ்வில்
அவ்வப்போது சில தியாகங்கள்
தியாகமே ஆனது
உன் வாழ்க்கை


இவர் தான் தலைவரெனும்
உடல் மொழி உனக்கு
கை மண் அளவே உன் படிப்பு
அறிவுப் பார்வையில் தொலைநோக்கு.

தூக்கத்தை துறந்து
ஏழைகள் ஏற்றம் பெறக்
கனவு கண்டாய்

சுதந்திரத்தை போராடிப் பெற்றோம்
வருமையை சுதந்திரமாய் பெற்றோம்

சில சோற்றுப் பருக்கையில்
குழந்தையின் பசியாற்றி
பசி மறந்த தாய் போல்
அவ்வப்போது சேர்ந்த நிதியிலும்
அருமையான திட்டங்கள்
பல வகுத்தாய்
நிறைவாய் அவற்றை நிறைவேற்றினாய்.

நிர்வாகத் திறத்தால் நம் மாநிலத்தை
முன்னிலையாக்கினாய். மற்ற
மாநிலங்களுக்கு வழிகாட்டினாய்.

இப்போதெல்லாம்
ஓட்டுப்பசியாற்ற வேண்டி
ஆயிரக்கணக்கில் கோடிகள்
கொட்டி உடனடி உணவைப்போல்
குறுந்திட்டங்களாகவே சமைக்கின்றனர்.

ஏழைகளின் வயிற்றையே நீ
எப்போதும் பார்த்ததால்
அவர்கள் கையிலிருந்த வாக்குகள்
உன் கண்களுக்கு தெரியவில்லை.

ஏழை பங்காளன் எனும் வார்த்தை
உன்னால் தான் உயிர் பெற்றது.

எத்தனை நேர்மை
எத்தனை உழைப்பு
எத்தனை திட்டங்கள்

உன்னால்
நித்தம் ஒருவேளை பசியாறினோம்
இலவசமாய் கற்றுத்தேறினோம்

பசியாற்றி வளர்த்த தாயை
சிலர் பட்டினி போட்டது போல்
சுக வாழ்வு கிடைக்குமென
நம்பிய எம் மக்கள்
ஜனநாயகத்திற்கும்
அதை காத்து உழைத்த உனக்கும்
ஒன்றாய் ஓய்வளித்து தோற்றார்கள்

பலனை எதிர்பாராத
கர்ம வீரன் நீ
உனக்குள் பாதகமில்லை
ஆனால்….

உண்மையறிந்து உறுத்துகிறதே
எங்கள் நெஞ்சம்

இதோ
உன்னால் பசியாறிய
எங்கள் கைகளில் ஓட்டு

ஆனால்

உன்போன்ற தலைவர்
ஒருவர் கூட இல்லையே இப்போது
நாங்கள் வேண்டிடும் அந்தத் தலைவர் வருவார?

நீ போற்றிக் காத்த ஜனநாயகம்
மீண்டும் துளிர்க்குமா?

அதைக் காண ஏங்குகிறோம்-உன்
ஆன்மா இப்போதும் படுத்திருக்கும்
என நம்புகிறோம்.

எங்கள் கண்ணீர் வாக்குகளால்
உன்னை எப்போதும் ஜெயிக்கவைப்போம்
நீ கூறியது போல்
எங்கள் எண்ணங்களில்
எப்போதும் படுத்துக் கொண்டே
ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்.

No comments:

Post a Comment